Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

ஆன்லைன் பேங்கிங் நன்மைகளும் குறைகளும்

தற்போது நாட்டுடைமை யாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி தனியார் ஷெட்யூல் வங்கிகளும் ஆன்லைன் பேங்கிங் எனப்படும் இன்டர் நெட் வழி வங்கி நிதி பரிமாற்ற வசதிகளை அளித்து வருகின்றன. இந்த வசதியை கம்ப்யூட்டர் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், பி.சி. பேங்கிங் மற்றும் ஹோம் பேங்கிங் எனவும் அழைக்கின்றனர். பல வாசகர்கள் இந்த வசதியினை நாம் நம் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்துவதில் பிரச்னை ஏதும் உள்ளதா என்று கேட்டு கடிதங்களை எழுதி உள்ளனர். இதில் உள்ள நல்லதுகளையும் அல்லதுகளையும் இங்கு பார்க்கலாம்.

நன்மைகள்:

1. ஆன்லைன் பேங்கிங் முறையில் மிகப் பெரிய நன்மை ஒன்று உண்டென்றால் அது நேரத்தை மிச்சம் செய்வதுதான். நீங்கள் உங்கள் பணத்தைக் கையாளும் விதம் குறித்து எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் வங்கி சென்று செக்குகளை எழுதி படிவங்களை நிரப்பும் வேலையையும் அதில் செலவழிக்கும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. அது மட்டுமின்றி ஒரு பரிமாற்றத்திற்கான நேரத்தையும் வெகுவாகக் குறைக்கிறது. சில வேளைகளில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் கையாளுவதைக் காட்டிலும் குறைவான நேரத்தில் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

2. ஆன்லைன் பேங்கிங் என்பது 24 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் மேற்கொள்ளக் கூடிய காரியம் ஆகும். எனவே வங்கிக்கு விடுமுறை, வங்கி மூடப்படும் நேரம் என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.

3. விடுமுறைக்கு வெளி மாநிலத்திற்கோ அல்லது வெளிநாட்டிற்கோ சென்று விட்டாலும் அங்கிருந்தும் உங்கள் நிதி அக்கவுண்ட்டைக் கையாளலாம். எல்லாமே ஒரு மவுஸ் கிளிக்கில் மேற்கொள்ளப்படும்.

4. பேப்பரினால் ஆன செக்குகளைப் பயன்படுத்தினால் அதற்கும் பணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிக்கு அது போல எந்தக் கட்டணமும் இல்லை. செக் புக் தீரப்போகிறதா? எப்போது மீண்டும் ஒரு புக் வாங்க வேண்டும் என்ற கவலை எதுவுமில்லாமல் ஆன்லைன் பேங்கிங் மேற்கொள்ளலாம். அது மட்டுமின்றி ஒரே ஒரு பாதுகாப்பான வெப் சைட் மூலம் உங்கள் அனைத்து பேங்க் அக்கவுண்ட்களையும் மேற்கொள்ளலாம்.

5. ஆன்லைன் பேங்கிங் வசதியைப் பெறும் இடத்தில் வேறு சில வசதிகளும் தரப்படுகின்றன. பங்கு விலை, விலை கூடுதல் குறித்த எச்சரிக்கை செய்தி, போர்ட்போலியே மேனெஜ்மென்ட் என பல வகை உதவிகளும் வசதிகளும் தரப்படுகின்றன.

குறைகள்:

1. நன்மைகளுக்கு எதிராக தீமைகள் என எதனையும் பட்டியலிட முடியாது. குறைகள் எனச் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம். ஆன்லைன் பேங்கிங் என்பது சில நிமிடங்களில் முடியும் என்றாலும் சில வேளைகளில் வங்கிகளின் இணையப் பக்கங்கள் கம்ப்யூட்டர் திரையில் கிடைக்க வெகுநேரம் ஆகிறது. குறிப்பிட்ட நாளில் அந்த வங்கி இணைய தளப் பக்கத்தில் அல்லது அதனைக் கையாளும் சர்வரில் பிரச்னை இருந்தால் இந்த வங்கிக்கு அன்று விடுமுறை என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான். இது போன்ற சில எதிர்பாரா நிலைகளுக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

2. ஆன்லைன் வங்கிக் கணக்கினை அவ்வளவு எளிதாக உடனே தொடங்கிவிட முடியாது. இணைய தளத்தில் நீங்கள் பதிந்து கொள்ள ஒரு யூசர் பெயரும் பாஸ்வேர்டும் தேவை. இவற்றிற்கான விண்ணப்பத்தினை அளித்து பின் வங்கியின் தலைமை அலுவலகம் அல்லது ஆன்லைன் பேங்கிங் விவகாரங்களைக் கவனிக்கும் அலுவலகத்திற்கு உங்கள் விண்ணப்பம் சென்று அங்கிருந்து உங்களுக்கான கடிதம் வருவதற்கு சில மாதங்கள் ஆகலாம்.

3. உங்கள் வங்கியின் இணையதளத்தில் உங்கள் அக்கவுண்ட்டைக் கையாளும் விதம் குறித்து முற்றிலும் அறிந்து கொள்ள உங்களுக்குச் சில நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். அதுவரை பொறுமையாக இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் நீங்கள் விரும்பும் பணப் பரிமாற்றம் ஏற்படாமல் வேறு பாதகமான பரிமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

4. ஒரு சிலர் தாங்கள் வங்கியில் கொடுக்கும் செக்கினையே பல முறை உற்றுப் பார்த்து உதறிப் பார்த்து கொடுப்பார்கள். பணத்தைப் பல முறை எண்ணிக் கொண்டே இருப்பார்கள். அத்தகைய பழக்கம் கொண்டவர்கள் இணைய தளம் மூலம் பேங்க் பணிகளைக் கையாண்டுவிட்டு தூக்கத்தைதொலைத்துவிட்டு இருப்பார்கள். பணம் சேர்ந்திருக்குமா என்ற கேள்வியை பலரிடம் கேட்டு பரிதாபமாக நிற்பார்கள். இவர்களுக்கு ஆன்லைன் பேங்கிங் குறித்து சரியாக விளக்க வேண்டும். அல்லது இந்த சந்தேக எண்ணத்தைத் தவிர்க்கும் வழியைக் கற்றுத் தர வேண்டும். பொதுவாக ஆன்லைன் பேங்கிங் செய்பவர்கள் இணைய தளம் மூலம் தங்கள் அக்கவுண்ட் பக்கத்தைப் பார்த்து அவ்வப்போது பிரிண்ட் எடுத்து பைலாக வைத்துக் கொள்ள வேண்டும்.

என்ன! ஆன்லைன் பேங்கிங் வேண்டுமா? வேண்டாமா? நீங்கள் தான் இரு பக்கத்தையும் இப்போது தெரிந்து கொண்டீர்களே! உங்களுக்குத் தேவையானதை நீங்களே தேர்ந்தெடுத்து பின்பற்றுங்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts